பாம்புக்கடி: முதலுதவியும், தடுப்பு முறைகளும்


பாம்பு_தீண்டுதலின்_முதலுதவி


பாம்பு தீண்டுதலுக்கு ஆளானவர்களுக்கு பொருத்தமான முதலுதவிகள் அளிக்கப்பட வேண்டும். உடலமைப்புக்குள் செலுத்தப்பட்ட விஷம் பரவுவதை தடுக்கவும், குறைக்கவும் அத்துடன் தீண்டுதலினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை தடுக்கவும் இது உதவும். 


ஆபத்தான முதலுதவி ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

கீழே எளியதும் இலகுவில் செய்யக்கூடியதும் பயனளிக்கக் கூடியதுமான கெடுதல் இல்லாததுமான வழிமுறைகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.


✅ 1. பாம்பு தீண்டுதலை தொடர்ந்து, தீண்டப்பட்டவருக்கு பொதுவாக ஏற்படும் பிரதிபலிப்பு பயமாகும். அவருக்கு மரணம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் ஏற்படலாம். அவருக்கு நம்பிக்கையூட்டக்கூடிய முறையில் விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக பின்வரும் முக்கிய தரவுகளை அழுத்திக் கூற வேண்டும். 


💓 அநேகமான பாம்புகள் விஷம் உள்ளவைகள் அல்ல


💓 தீண்டிய பாம்பு விஷமுள்ளதாக இருந்தாலும் அது விஷத்தை உட்செலுத்தாமலிருக்க முடியும். 


💓 பல அடையாளங்கள் இருந்தாலும் விஷம் உடலினுள் புகுந்துவிட்டது என கருதலாகாது. 


💓 விஷம் உடபுகுந்தாலும் வைத்தியசாலைகளில் நற்பலனளிக்கக்கூடிய சிகிச்சை முறை உண்டு. 

இச் சிகிச்சைகள் பூரண குணத்தை தரவல்லது.


✅ 2. பாம்பினால் தீண்டப்பட்வரை பிரதானமாக தீண்டப்பட்ட அவையவத்தை அசைவற்ற நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில்,

தீண்டப்பட்ட உறுப்பு அசைந்தால் பாம்பினால் உட்புகுத்தப்பட்ட விஷம் உடலினுள் மிக விரைவாக அகத்துறிஞ்ஞப்படும். எனவே தீண்டப்பட்டவரை அசையாது வைத்தாக வேண்டும். 


💓 அவரை நடத்திச் செல்வதிலும் பார்க்க தூக்கிச் செல்வதே சிறந்தது. 


💓 உறுப்பை ஒரு துண்டு பலகை போன்ற கடினமான பொருளின் மேல் வைத்துக்கட்டி அவ் உறுப்பை அசைவற்றதாக செய்வதால் உட்புகுந்த விஷம் அகச்சுறிஞ்ஞப்படுவதை தாமதப்படுத்தலாம். இது

நோவை குறைப்பதற்கு உதவும். 


✅ 3. பாம்பு கடித்த இடத்தில் தோலின் மேலிருக்கும் விஷத்தை அகற்ற அவ்விடத்தை சவர்க்காரமும் நீரும் பாவித்து மெதுவாக கழுவ வேண்டும் அல்லது ஈரத்துணியால் துடைக்க வேண்டும். 


✅ 4. விஷப் பாம்பு தீண்டுதலிற்குப்பின் தீண்டப்பட்ட உறுப்பு வீங்குவது ஒரு பொதுவான விடயமாகும். 


💓 அப்படி வீக்கம் ஏற்படின் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தடுக்க விரைவாக அணிந்திருக்கும் மோதிரம், வளையல்கள், பாதசரம், நூல், இறுக்கமான உடுப்பு போன்றவற்றை அகற்ற வேண்டும். 


✅ 5. வலியை குறைக்க "பரசிற்றமோல்' (Paracetamol) பாவிக்கலாம் 


✅ 6. பாம்பு தீண்டுதலுக்கு உள்ளானவரை முடியுமான வரை விரைவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். 


💓 பாம்புக்கடி ஏற்பட்ட சூழ்நிலை பற்றிய தகவல்களை சரியாக வழங்குவதன் மூலம் பாம்பின் வகையை அடையாளம் காண உதவும் கையடக்கத் தொலைபேசி மூலம் பாம்பினை புகைப்படம் எடுப்பதன் மூலம் பாம்பின் வகையை இலகுவாக அடையாளம் காணலாம். 


💓 சரியான மருத்துவ சிகிச்சையை அளிக்க பாம்பின் வகையை அடையாளம் காணுவது அவசியம். இதன் மூலம் கடித்த பாம்பை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது தேவையற்றது. உயிருள்ள அல்லது இறந்த பாம்புகளை மிகவும் அவதானத்துடன் கையாள வேண்டும்.


✅ 7. பாம்பு தீண்டுதல் ஏற்பட்டவருக்கு மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் செயற்கை சுவாசத்தை (Mouth to Mouth or Bag & mask) வழங்குவது நோயாளியின் உயிரை காப்பற்ற உதவும் முதலுதவி சிகிச்சை ஆகும். பொதுவாக இவ் பிரச்சினை (Krait) விரியன் இன பாம்புகளால் ஏற்படுகின்றது.


🚫 #தவிர்க்கப்பட_வேண்டிய_சில_விடயங்கள்


❌ 1. தீண்டப்பட்ட காயத்தை கூரிய கத்தியால் வெட்டுவதும் அல்லது உறிஞ்சும் முறையை கையாள்வதும் தவிர்க்கப்பட வேண்டும். 


பாம்புகள் அநேகமாக நஞ்சை மிகவும் ஆழமாக புகுத்துவதனால் உறிஞ்சுவது எந்தவித பயனையும் தரமாட்டாது. அனுபமற்ற முறையில் கத்தியால் வெட்டுவதனால் தசை நார், இரத்தக் குழாய்கள் நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்த நேரிடலாம். 


இந்த காயங்களிலிருந்து இரத்த பெருக்கு ஏற்படின் அது இன்னும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். 


❌ 2. முதற் சிகிச்சை அளிப்பதற்கென பாம்பு தீண்டுதலுக்கு உள்ளான பகுதியை கயிறு போன்றவற்றால் இறுக்கி கட்டுப்போடுவதை தவிர்க்கவும். இலங்கைப் பாம்புகளால் ஏற்படும் பாம்புக் கடிக்கு துணிகளால் அழுத்தமாக கட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். 


❌ 3. கொண்டிஸ் (Condys crystals) படிவங்களை போன்ற இரசாயன பொருட்களை காயத்தின் மேல் இடுவதை தவிர்க்கவும். இவை பயனற்றவை, அத்துடன் தசைநார்களையும் சேதப்படுத்தக் கூடியவை 


❌ 4. மூக்கின் வழியால் எண்ணெய் போன்ற திரவப்பதார்த்தங்களை புகுத்தி சிகிச்சை அளிப்பது ஆபத்தை ஏற்படுத்தும். ஆதலால் இம் முறைகளைக் கையாளக் கூடாது. ஏனெனில், இதனால் சுவாசப்பையில் நோய்கள் ஏற்படவும் நிரந்தர செவிட்டு நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு. 


❌ 5. மதுபானம் விஷத்தை உடம்பில் விரைவில் பரவச் செய்யும் ஆதலால் அதை கொடுக்கக் கூடாது. 


❌ 6. செவ்விளநீர், இளநீர், பழரசங்கள் என்பவற்றை கொடுக்கக்கூடாது. பாம்பு தீண்டலினால் சிறுநீரகத்தில் சேதம் ஏற்பட்டால் இவற்றிலுள்ள பொட்டாசியம் எனப்படும் ஒரு வகை உப்பு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்த முடியும். 


❌ 7. Asprin (அஸ்பிறின்)வயிற்றிலே இரத்தக்கசிவை ஏற்படுத்தும். பிரதானமாக முத்திரை புடையன் (Russell's viper) தீண்டியபின் அஸ்பிறின் கொடுக்கக் கூடாது. 


❌ 8. பயப்பிடுவதை தவிர்க்கவும் பாம்பு தீண்டியவருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.


 ☣️ #பாம்புக்கடியிலிருந்து_தடுக்கும்_முறைகள் 


பொதுவாக நிலங்களில் வாழும் விஷமுடைய பாம்புகள் மனிதர்கள் நடமாடும் பகுதிகளிலேயே அதிகளவில் காணப்படுகின்றன. 


பாம்புக்கடிக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளவர்கள் சில தடுப்பு முறைகளை கையாள்வதன் மூலம் இந்நாட்டில் பாம்பு தீண்டுதலை குறைத்துக் கொள்ளலாம். 


பின்வரும் நடவடிக்கைகளை கையாள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவையாவன


💝 1. பெரும்பாலான பாம்புக்கடிகள் கணுக்காலிற்கு கீழில் உள்ள பகுதிகளில் தீண்டுவதால், பாம்புகள் வசிக்கும் இடங்களில் வேலை செய்யும் போதும், நடக்கும் போது சப்பாத்து அல்லது கணுக்கால் வரை மூடும் பாதரட்சைகள் (boots) அத்துடன் கணுக்கால் வரை நீளமுள்ள ஆடைகள் அணிந்து பாதுகாத்துக் கொள்ளவும். 


பாம்புகள் அதிகமாக உயர்ந்து வளர்ந்த புற்கள், பற்றைகள், காடுகள், விவசாய நிலங்கள் என்பவற்றில் காணப்படும் 


💝 2. இரவில் பாம்புகள் மீது மிதிப்பதை தவிர்க்க வெளிச்சம் (torch Light) ஒன்றினை எடுத்துச் செல்லவும் 


💝 3. எறும்பு புற்றுகள், அடர்ந்த புதர்கள், மரக்குற்றிகளின் கீழ்ப்பக்கங்கள் மரப் பொந்துகள் போன்றவற்றினுள் கவலையினமாக கையை வைக்காதீர்கள். 


மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலுள்ள பாம்புகள் வசதியாக வாழக் கூடிய இடங்களை துப்பரவாக வைத்திருப்பதன் மூலம் எச்சரிக்கையாக இருங்கள்.

 

எறும்பு புற்றுகளை அழிக்கவும், 


மரப் பொந்துகளை நிரப்பவும் 


தரையில் விழுந்து கிடக்கும் மரங்கள், குற்றிகளை அகற்றவும். 


வேலை செய்யும் போது கற்பாறைகள் 

மரக்குற்றிகள் போன்றவற்றை அகற்றும் போது 


கவனம் செலுத்தவும். ஏனெனில் இவற்றின் கீழ் பாம்புகள் குடியிருக்கும். 


மரக்குற்றிகளை உருட்டி அகற்றும் போது உங்களை நோக்கி உருட்ட வேண்டும். இதன் மூலம் பாம்பிற்கும் உங்களிற்கும் இடையில் ஒரு தடை ஏற்படும். 


💝 4. பாம்புகளை பற்றி சிறந்த அறிவுள்ளவர்களே பாம்புகளை கையாளவோ வேண்டும். 


இறநத்து போல் காணப்படும் பாம்பையும் மிகவும் அவதானமாக கையாள வேண்டும். ஏனெனில் அவை உயிருடன் காணப்படலாம். 


அத்துடன் இறந்த பாம்புகள் கூட தூண்டற்பேறின் மூலம் தீண்ட வாய்ப்புள்ளது. 


வனவிலங்கு பாதுகாப்பின் அனுமதி இல்லாமல் பாம்புகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் 


💝 5. குப்பை கூடங்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை கிரமமாக அகற்றி நீங்கள் வாழும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், பாம்பினை கவரும் பிராணிகளான எலி, தவளை போன்றவற்றையும் அகற்றுவது நல்லது.

Comments