கொரோனாவுக்கு பின் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர்

ஆசிரியர்கள் கவனம்...


கொரோனாவுக்கு பின் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர் 

(கதைதானேயொழிய நிஜம் இல்ல)

பள்ளிக்கூட வாசலில் தனது மோட்டார்சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு  நிறுத்திவிட்டு கருணாகரன் சேர் ஓருமுறை தனது மூக்கு  கண்ணாடியை சரி செய்தவராக மனதுக்குள்!

"மூன்று மாசத்துக்குள்ள பள்ளிகூடத்தில் எவ்வளவு மாற்றம்"... 
என்றவராக தனது வகுப்பு நோக்கி செல்கிறார். 

வழியில்  கண்ட ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தலையசைத்து "குட் மோர்னிங்!"...  சொன்னவாறு வகுப்பறைக்குள் நுழைகிறார். 

ஒருதடவை தனது ஜீன்ஸை இழுத்துவிட்டு மாணவர்களை பாக்கிறார். 

"பிள்ளைகள் என்னமா வளந்திருக்கிறாங்க... வீட்டு சூழல் அவர்களை என்னமா மாத்தியிருக்கு " 

என மனதுக்குள் எடை போட்டுகொண்டு முதல்நாள் இரவு  பாத்துக்கொண்டு வந்ததை ஒப்புவிக்க தயாராகினார். 

பிள்ளைகளின் முகங்களில் வியப்பு! கண்முழி வெளியில் வந்து விழுந்து விடுமளவுக்கு முழுசத்தொடங்கினர்!!.

"பள்ளிக்கூடம் தொடங்கினா பிறகு பிள்ளைகளுக்கு ஏடு தொடக்க வேணுமெண்டு" கௌரீசன் சேர் சும்மாவா சொன்னார்.  

மனசுக்குள் பிள்ளைகள் பதட்டப்படுவதை நினைத்து புன்முறுவல் செய்தார். 

முன்வரிசையில் இருந்த மாணவி   ஒருவரை "சஜானா எழும்பு "...  என அழைத்து அடுத்த கேள்வி கேக்க முன்னர் மாணவியும் 

"சேர் நான் அக்சரா...  சஜானா இல்லை சேர் "...  என தயங்கியவாறு மெல்ல பதிலளித்தாள். 

தன்னை சுதாரித்துக்கொண்ட கருணாகரன் சேர், 

"அதனாலென்ன இப்ப!!!.. முதலாம் பாடம் கணிதம் தானே!!!"... என அதட்டும் குரலில் கேட்டார். 

அந்த மாணவி  மீண்டும் பயந்த குரலில் "இப்ப குடியுரிமை பாடம் சேர்" என தட்டு தடுமாறி கூறினாள். 

"அதோட "... என ஏதோ சொல்ல நினைத்தவள் பயத்தில் நிலம் நோக்கினாள். 

இப்ப கருணாகரன் சேருக்கு லேசா சந்தேகம் வந்திட்டு, 

"என்ன பிள்ளை சொல்லும்!... சொல்ல வந்ததை சொல்லும்!!..." என  குரலில் வந்த பதட்டத்தை மறைத்து வினவினார். 

அந்த மாணவியும் " சொரி சேர்... நீங்க எங்களுக்கு படிப்பிக்கிற ஆசிரியரே இல்லை"... என்றாள். 

"எனக்கு இப்பதான் டைம் டேபிள் மாத்தி உங்களுக்கு பாடம் போட்டிருக்கு! எதுக்கும் ப்ரின்ஸிபல்ல சந்திச்சுக்கொண்டு வாறன்"...  என்றவாறு விட்டா போதும் என நினைத்து கொண்டு வகுப்பறைக்கு வெளியே வருகிறார். 

"சே... என்ன அவமானம்...  அதுவும் பிள்ளைகளிட்ட"... என சலித்துக்கொண்டு பிரின்சிபல்  ஆபீஸ் நோக்கி செல்கிறார். 

என்ன இருந்தாலும் வெக்கத்தை விட்டு விசாரிச்சிட்டு போயிருக்கலாம். 

ஆஃபீஸ்க்குள் நுழைந்தவருக்கு மற்றோரு ஆச்சரியம் காத்திருந்தது.  அதிபர் ஆளே அடையாளம் கணெலாம வண்டியும் தொந்தியுமா மாறியிருந்தார். 

கொரோனாவுக்க மனுஷன் வஞ்சகம் இல்லாம விளாசியிருப்பார் போல!...

எனக்கு மனுசனா முக்கியம் வந்த அலுவல கதைச்சிட்டு மாற வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டு 

"எக்ஸ்கியூஸ் மீ சேர்"... என மெல்ல ஆரம்பித்தார். 

அதிபரும் "யெஸ்"... என ஏதோ சொல்ல வாயெடுக்குமுன்னே 

"கிரேட் 8கு என்ர சப்ஜெக்ட் சேர்...  ஆனால் பிள்ளைகள் என்னை தங்களுக்கு கிளாஸ் எடுக்கிற டீச்சர் இல்லையென்று சொல்லினம் அதோட என்னை தெரியாத மாதிரி முழுசீனம்... என்னால பாடம் எடுக்க முடியல சேர்... நீங்கதான் தலையிட்டு இத பாக்க வேணும்"... என பொரிந்து தள்ளினார். 

ஓருமுறை ஏற இறங்க பார்த்த அதிபர் இவரது பிரச்சனையை விளங்கியவராக "இங்க  பாருங்கள் மிஸ்டர் "... 

"கருணாகரன் சேர்" என முந்திக்கொண்டு சிக்சர் அடிச்ச மாதிரி பெயரை சொன்னார். 

"ஆ மிஸ்டர் கருணாகரன்... இண்டைக்கு இங்க கிரேட் 8 கிளாஸே  இல்லை. நீங்க போனது கிரேட் 10... கிரேட் 10கு மேலதான் அரசாங்கம் ஸ்கூல் நடத்த சொன்னதை நீங்க கேக்கலையா?... 

இப்போது கருணாகரன் ஆசிரியர் பேந்த பேந்த முழித்தார். சே பேஷ்புக் வைபர் இல்லாதது எவ்வளவு தப்பா போச்சு என மனசுக்குள் தன்னை நன்றாக திட்டிக்கொண்டார். 

"அதைவிட முக்கியம்"... என குரலை தாழ்த்தி "இத சொல்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு"... என அதிபர்  தயங்கினார். 

இப்போ கருணாகரன் மாஸ்டருக்கு ஏசி அறையிலும் லேசா வியர்க்க ஆரம்பித்தது. 

"நீங்க எங்கட ஸ்கூல் ஆசிரியரே இல்லை சேர்"...

சொன்னதுதான் தாமதம் இப்ப கருணாகரன் மாஸ்டர் தெப்பலாக வியர்வையில் குளித்தார். 

சடடென்று திரும்பி தனது தவறை உணர்ந்தவராக மோட்டார் சைக்கிளை நோக்கி ஒட்டமும் நடையுமாக சென்றார். 

"இண்டைக்கில்லாட்டியும் எண்டைக்கோ ஒருநாள் பள்ளிக்கூடம் மாறிப்போய் தொலைப்பீங்க பாருங்க"... என பொண்டாட்டி தனது ஞாபக மறதிக்கு அடிக்கடி திட்டுவது அப்போதும் காதில் கணீரென ஒலித்தது. 
 
(பி.கு: எதுக்கும் நியமன கடிதத்தை சரி பார்த்துசெல்லல் சாலச்சிறந்தது)

Comments