செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்

மலையகத்தின் கல்வியை உயர்த்துவதற்காக கடந்த 14 வருடங்களாக மகத்தான சேவை ஆற்றி வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினருக்கு பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 14 ஆவது அகவை நிறைவை முன்னிட்டு செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்வி அபிவிருத்தியின் ஊடாகவே சமூகத்தின் மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியும். அந்த வகையில் மிகக் காத்திரமான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சிறப்பான கட்டமைப்புடன் நேர்த்தியாக செயற்பட்டு வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமானது முன்னுதாரணமாகத் திகழ்கிறது.


ஓர் அரசாங்கத்துக்கு நிகரான சேவைகளை மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் மலையகம் எங்கும் முன்னெடுத்து வருகின்றது.


இலவச கல்விக் கருத்தரங்குகள், பாடசாலைகளுக்குத் தேவையான கட்டிடங்களை அமைத்துக்கொடுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல், உபகரணங்களை வழங்குதல், தலைமைத்துவ பயிற்சிகளை நெறிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த அமைப்பினரால் மலையகம் எங்கும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.


இதனூடாக பயனடையும் நமது மாணவர்கள் சிறந்த வகையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றமையை நாம் பார்க்கின்றோம்.


அதேவேளை, மலையகத்தில் வறுமைகோட்டுக்குக் கீழ் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தொடர்ச்சியாக வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியது.


இன்று சுமார் 3 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் சமூக மாற்றத்துக்காக மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்துடன் இணைந்திருப்பதானது எமக்கு மிகப்பெரிய பலமாகும்.

மலையகத்தில் தொடர்ச்சியாக 14 வருடங்கள் கல்வி அபிவிருத்தியில் ஈடுபடுவதானது மிகச் சவாலானதும் பொறுப்புமிக்கதுமான பணியாகும். 


அதனை மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் மிகச் செவ்வனே செய்து வருகின்றனர்.

மலையகத்தின் பல்வேறு பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர், யுவதிகள் இந்த அமைப்பின் ஊடாக ஒரு குடையின் கீழ் செயற்படுவதையும் சிறப்பம்சமாக இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


மாணவர்களின் அறிவுக்கண்ணைத் திறப்பதற்காக தன்னலம் பாராது இந்த பாரிய சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஸ்தாபகர்கள், பணிப்பாளர்கள், தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாக சபையினரையும் மன்ற உறுப்பினர்களையும் மனதார வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.


இனிவரும் காலங்களிலும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சேவைகள் மேலதிக  வளர்ச்சியடைவதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Comments