ஹீரோக்களுக்கு இணையாக சில்க்

 ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன 

 இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு 

 வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டி⁸ 

 எத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?



ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ, அதுவாகவே அவர்களின் பிம்பம் நம்மில் தங்கிவிடுகிறது.. அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும்!! 


3 வேளை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காகவே, தன் பிஞ்சு வயதில் கல்யாணம் செய்து கொண்டு மாமியார் வீட்டுக்குள் நுழைந்தார் விஜயலட்சுமி என்கிற சில்க்.. 


ஆனால், அங்கேயோ தரித்திரம் கூரை மீது ஏறி தாண்டவமாடி மிரட்டியது.. பசி ஒரு பக்கம், மாமியார் கொடுமை ஒரு பக்கம் என ஒரேடியாக மென்று தின்றுவிட்டது.


வயித்துக்கு ஒன்னும் இல்லையென்றாலும் வஞ்சம் இல்லாமல் வழிந்து நிறைந்த வனப்பே, அவரை இறுதிவரை காப்பாற்றியது.. 


ஒருமுறை சில்க்கிடம் "நடிக்க வராவிட்டால் என்னாவாக ஆகியிருப்பீர்கள்" என்று கேட்டதற்கு "நக்சலைட் ஆகியிருப்பேன்" என்று சொன்ன பதில் பலருக்கும் தூக்கி வாரிப்போட்டது.. 


இதற்கு காரணம் அவர் அனுபவித்த கொடிது கொடிது இளமையில் வறுமை!! 



சினிமாவில் நாம் பார்த்த சில்க்கு-க்கும், அவரது தனிப்பட்ட சுய-விருப்பு வெறுப்புகளுக்கும் ஏகப்பட்ட முரண்கள்.. 


சாவித்ரி மாதிரியே வரணும் என்று ஆசைப்பட்ட சில்க்-க்கு வாய்த்தது எல்லாமே நேர் எதிர் கேரக்டர்கள்தான்.. 


ஒருவேளை "அலைகள் ஓய்வதில்லை" படம் முதலில் வந்திருந்தால் அவரது ஆசை ஈடேறியிருக்குமோ என்னவோ? 


போதை ஏறிய கண்களுடன் "வா மச்சான் வா" என்று பாடவும்.. அப்போது கிறங்கி பார்த்த ரசிகர்கள், கடைசிவரை அப்படியேதான் அவரை பார்க்க  விரும்பினர். 


முகத்தில் எதுவுமே இல்லாத வெறுமை... முகசாயங்களே இல்லாத பொலிவுடன் ஒரு கறுத்த பெண் இவ்வளவு அழகாக இருக்க முடியுமா? என்று சக நடிகைகளே சில்க்கை கண்டு வியந்தனர்.. சிலர் பொறாமையும் கொண்டனர்!! 


விற்காத உச்ச நடிகர்களின் படங்கள்கூட சில்க்கின் ஒரு பாட்டை உள்ளே திணித்து நுழைத்தால் சக்கை போடு போடும் என நம்பப்பட்டன.. 


ஹீரோக்களுக்கு இணையாக சில்க் போட்டோவையும் போஸ்டரில் ஒட்டினால்தான் படம் வியாபாரமாகும் என்ற சுய அந்தஸ்தையும் உயர்த்திய ஒரே கவர்ச்சி நடிகை சில்க் மட்டுமே!! 


ஷூட்டிங்கில் சிவாஜி கணேசன் வரும்போதெல்லாம் எல்லோருமே மரியாதைக்காக எழுந்து நிற்கும் போது, சில்க் மட்டும் சேரில் உட்கார்ந்து இருப்பாராம்.. 


இதை பற்றி அவரிடம் அங்கிருந்தோர் பதறிகொண்டு கேட்டதற்கு, "நான் எழுந்து நின்னா, என்னுடைய குட்டி டிரஸ் சிவாஜி சாருக்கு கூச்சத்தை தந்துடுவிடும். 


அவருக்கு அந்த தர்மசங்கடம் வரக்கூடாதுன்னுதான் உட்கார்ந்தே இருக்கேன்" என்றாராம். 


கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இந்த பெண் இப்படி டான்ஸ் ஆடுகிறாரே என்று சிலர் முகம்சுழித்த சூழலிலும், அடுத்தவரின் கூச்சத்தையும் மதித்து நடந்த சில்க் மனசு பற்றி பலர் அறியவில்லை! 


அப்போது சில்க்-க்கு 18 வயது.. ஏவிஎம் ஸ்டூடியோ முன்பு ஒரு மாவு மிஷினில் மிளகாய் அரைக்க வந்திருந்தபோதுதான் வினுசக்கரவர்த்தியின் கண்ணில் பட்டுள்ளார்.. 


அன்றைக்கு சுழல ஆரம்பித்த அந்த 'வண்டிச்சக்கரம்' வினுசக்கரவர்த்திக்கும் இறுதிவரை பெருமையையே சேர்த்து கொண்டிருந்தது.. 


சில்க்குக்கும் எனக்கும் அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா, அவ எனக்கு மகளா பிறக்கணும்னு ஆசைப்படுறேன்" என்று கண்கலங்கி வினுசக்ரவர்த்தி ஒருமுறை சொல்லியிருந்தார் என்றால், 


அதற்கு காரணம் சில்க்-ன் வெள்ளை மனசுதான்!


வடபழனி குமரன் காலனியில்தான் சில்க் ஸ்மிதா வீடு.. தெருவில் சின்ன பசங்கள் விளையாடி கொண்டிருப்பதை பார்த்தால், "ஸ்கூலுக்கு போங்க..ப்பா, படிப்பு தான் முக்கியம்" என்ற அறிவுரைகளை தந்தபடியே இருந்திருக்கிறார்.. 


அரைகுறை உடையுடுத்தி சம்பாதித்த பணத்தையும், கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ நல்ல காரியங்களுக்கு செலவழித்துள்ளார். 



வறுமையால் நக்சலைட் ஆக மாற நினைத்தார், ஆனால் முடியவில்லை.. நடிப்பில் சாவித்ரி போல வரவேண்டும் என்று நினைத்தார், அதுவும் நடக்கவுல்லை.. 


கல்யாணம், குழந்தை குட்டியுடன் சராசரி குடும்ப வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார்.. அதுவும் ஈடேறவில்லை.. 


கடைசியில் அவர் ஆசைப்படாத மரணம் 35 வயதிலேயே இழுத்து கொண்டு போய்விட்டது.. அதன் மர்ம முடிச்சுகளை இன்னும் யாராலும் அவிழ்க்க முடியவில்லை!!


சில்க் பற்றி வதந்திகள் வராத பத்திரிகைகளே அன்று இல்லை.. 


எத்தனை கேவலங்கள், அவதூறுகள், உயரங்கள், பள்ளங்கள், வந்தாலும் கலங்காமல் அவைகளை துணிச்சலுடன் கடந்துள்ளார்.. 


ஆனால், தனக்கு என்ன தேவை என்பதை மட்டும் கடைசிவரை அறிந்து கொள்ள முடியாத அப்பாவியாகவே இருந்துள்ளார்.. 


திமிர் பிடித்தவள் என்ற பெயரை அனாயசயமாக தட்டி சென்ற சில்க், நிஜத்தில் ஒரு மிருதுவான குழந்தை என்பதை நெருங்கி பழகியவர்கள் மட்டும் இன்னமும் சொல்லி கொண்டே இருக்கிறார்கள்!!  


எனினும், சமூக ஒழுக்கம், சமூக கட்டுமானம் என்ற வரையறைக்குள் இவரை கொண்டு வந்து பெரும்பாலானோர் பார்க்கவேயில்லை..  


தன் அகத்தை யாராவது விரும்பி ஏற்று கொள்வார்களா என்ற ஏக்கத்திலேயேதான் இறுதி நாட்கள் கழிந்திருக்கின்றன.. 


வலி நிறைந்த வாழ்க்கையின் மீது,  பிடிப்பு தளர்ந்த நிலையிலும், சுற்றியுள்ளவர்களின் மீது நம்பிக்கையிழந்த நிலையிலும், 


பழிகள், காயங்கள் எல்லை மீறிய சூழலிலும்தான் அப்படி ஒரு சோக முடிவை எடுத்திருப்பார் போலும்!! 


ஆனால் இன்றளவும் தென்னிந்தியாவில் பேசப்படும் ஆளுமையாக சில்க் திகழ்கிறார்.. 


ஆந்திரத்திலிருந்து கரையை கடந்து தமிழகம் வந்த இந்த "கவர்ச்சி புயல்" ஒருபோதும் கரையை கடக்க நம் மக்கள் விட்டதே இல்லை.. 


ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது... "ஒரு பேரழகிங்கிறதை தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள்?!!"


- by . hemavandhana .

   அமுதன் மகேஸ்வர்மா .

Amudhan maheshvarma .

Comments