Mind Read | Nitharsanam 2020


சீனாவில் இருந்து பொருட்களை வாங்கி ஆன்லைன் மூலமாக விற்கும் ஒரு நிறுவனத்தில் தான் மனைவி வேலை பார்த்து வந்தார். வட இந்தியா தான் அந்நிறுவனத்தின் மிக முக்கிய விற்பனைக் களம் ஆதலால், ஹிந்தி தெரிந்திருந்த என் மனைவிக்கு அங்கே வேலை கிடைத்தது. ஒன்றரை வருடங்களாக வேலை பார்த்து வந்த நிலையில், இந்த மாதத்தோட முடிவுக்கு வர இருக்கிறது. மார்ச் மாதம் முதலே Procurement, Logistics, Supply என எல்லா தளங்களிலும் சிக்கல் மேல் சிக்கலை சந்தித்ததால், கிட்டத்தட்ட 70 பேர் வரை இருந்த அந்த நிறுவனத்தில் இப்போது 15 பேர் மட்டுமே. சீன எல்லை பிரச்சினைக்கு பிறகு சீனப் பொருட்களை இறக்குமதி செய்வது, தடை செய்யபட்டிருக்கிறது. சீன செயலிகளை தடை செய்தது போல அதிகாரபூர்வமாக இல்லாமல், அதற்கான கெடுபிடிகள் அதிகமாகி, இனி இறக்குமதி செய்ய முடியாது என்ற நிலைக்கு சென்றுவிட்டதாக தகவல். ஸ்டாக் இருக்கும் வரை விற்பனை செய்து விட்டு அதே பொருட்களை இனி இந்திய மார்க்கெட்டில் தேட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். கூடவே கொரோனா காலமும் சேர்ந்து கொள்ள இப்போதைக்கு வேறு வழியே இல்லாமல் விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயம்.  இத்தனை நாளாக தப்பித்து வந்த என மனைவியின் வேலை  7 பேராக குறைத்த போது பிழைக்கவில்லை. கொரோனா காலத்தில் பாதிக்கபட்ட எத்தனையோ கோடி பேரில் என் மனைவியும் ஒருவர் என்பதாலும், ஓரளவு இதை எதிர்பார்த்திருந்ததாலும், இந்த பதிவு அந்த பாதிப்பை பற்றியதன்று. 

பொருளாதாரம், அரசியல், உலகமயமாக்கல் பற்றிய சில புரிதல்கள் வந்த போது, இந்த அரசாங்கங்கள் மீது தீராக் கோபம் வந்தது. 130 கோடி பேர் இருக்கும் நாட்டை உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதை விட்டு சேவைக் கேந்திரமாக மாற்றி, சீனாவின் நுகர்வோர்களாக நம் நாட்டை மாற்றியதை பற்றி நினைக்கும் போதெல்லாம் பற்றிக் கொண்டு வரும். உண்மையில் உலக அரங்கில் இந்தியா இழந்த பொன்னான தருணங்கள் அவை. இந்தியா உற்பத்தி கேந்திரமாக மாறாமல் போனதால் ஏற்பட்ட விளைவுகளுக்கு ஒரு சிறிய உதாரணம் தான், பொறியியல் முடித்த மாணவர்கள் தோளில் பையுடன் டெலிவரி பாய் வேலை பார்த்துக் கொண்டிருப்பது. 

99-2000 களில் ஏர்செல் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக இருந்த போது, செல்போன்கள் அப்போது தான் அறிமுகமான காலம். சிம்கார்ட் விற்பனை செய்வது மட்டுமல்ல, அந்த வாடிக்கையாளரை அழைத்துச் சென்று, செல்போன் வாங்கிக் கொடுத்து, அதை எப்படி பயன்படுத்துவது என சொல்லியும் கொடுக்க வேண்டும். அவருக்கு மட்டுமல்லாமல் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கே சொல்லி கொடுக்க வேண்டும். கூடவே நண்பர்கள் உறவினர்கள் எண்களை சேமித்து கொடுக்க வேண்டும். அவ்வப்போது அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். அப்போது அனைவரும் விரும்பும் ஒரு செல்போன் நோக்கியா 5110... 

ட்யூட்டி பெய்ட் ஷாப்பில் மட்டுமே கிடைக்கும். அதுவும் சொல்லி வைக்க வேண்டும். இந்த போனை வாங்க மிக முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அந்த போன் எந்த நாட்டில் தயாரானது என்பது. Made in Germany, Made in Finland, Made in Czechoslovakia, Made in China. இப்படி நான்கு நாடுகளில் இருந்து இந்த போன் விற்பனைக்கு வரும். இதில் ஜெர்மனி, பின்லாந்து என்றிருந்தால் விலை அதிகம், கிடைப்பது அரிது. செக் குடியரசு தயாரிப்பாக இருந்தால் அந்த வாடிக்கையாளரை நாம் சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். அதுவே மேட் இன் சைனா என்றிருந்தால் எந்த வாடிக்கையாளரும் அதை வாங்கவே மாட்டார்கள். இத்தனைக்கும் எல்லாமே நோக்கியா நிறுவனத்தின் தயாரிப்பு தான். ஆனாலும் மேட் இன் சைனா என்றால் தெறித்து ஓடுவார்கள். இந்த விஷயத்தை பற்றி சொல்லாமல் போனை வாங்கிக் கொடுத்து பிறகு பெரிய பிரச்சினை ஆன கதையெல்லாம் இருக்கிறது. 

சீன பொருட்களின் மதிப்பு அவ்வளவு தான். சீனா என்றாலே போலி என்பது தான் அந்த நாட்டின் மீது இருந்த இமேஜ். அதன் பிறகு சீனாவின் சொந்த தயாரிப்பு  போன்கள் இந்திய மார்க்கெட்டில் வந்த போதும், சீனா செட் என்று இளக்காரமாக பார்த்த காலம் ஒன்று உண்டு. அப்போது நோக்கியா, சாம்சங், சோனி எரிக்சன் போன்ற போன்களை வாங்கியவர்கள் நாம். அப்படி இருந்த சீன செல்போன்கள் தான் இன்று ஒன் ப்ள்ஸ் மாடலாக பரிணாமித்து, அறிமுகபடுத்திய ஒரே நாளில் விற்று தீரும் நிலைக்கு முன்னேறியிருக்கின்றன. அவர்களின் இதர மாடல் போன்கள் உலகெங்கும் விற்பனையாகின்றன. செல்போன் என்ற ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும் கூட சீனாவின் வளர்ச்சி உங்களுக்கு தெரியும். உங்கள் கண் முன்னால் நடந்த விஸ்வரூப வளர்ச்சி. ஆனால் 20 வருடங்களாக ஒரே ஒரு இந்திய பிராண்ட் செல்போனை (வெற்றிகரமான) கூட கொண்டு வர முடியாத நிலையில் தான் நம் நாடு உள்ளது. 

இன்று இந்தியா சீனாவின் குப்பைத்தொட்டி. சீனாவிலிருந்து நமது இறக்குமதி கணக்கிட முடியாத அளவுக்கு சென்று விட்டது. அதையும் டாலரில் மட்டுமே வாங்கி அமெரிக்காவுக்கு விஸ்வாசமாக இருக்கும் நாடு தான் நமது இந்தியா. இன்றைய நிலையில் நாம் சீனாவிடம் வாங்காத பொருளே இல்லை என்றாலும், வெறும் தொலைத்தொடர்புத் துறையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். 99 முதல் செல்போன் புரட்சி.. இடையில் பி எஸ் என் எல்க்கு போட்டியாக தனியாருக்கு தொலைபேசி இணைப்பு வழங்க உரிமை வழங்கப்பட்டது. அவர்கள் உபயோகித்த வயர்களில் இருந்து, அவர்கள் வாடிக்கையாளருக்கு கொடுத்த தொலைபேசி வரை அனைத்தும் சீனத் தயாரிப்பு. பிறகு CDMA தொழில் நுட்பம் அறிமுகமானது. டாட்டாவும், ரிலையன்ஸும் களத்தில் குதித்தன. அவர்களும் சீனாவுக்கே சென்றனர். 500 ரூபாய்க்கு செல்போனை கொடுத்து புரட்சி செய்த ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கை கொடுத்ததும் சீனா தான். அதற்கு பிறகு இண்டர்நெட் யுகம் ஆரம்பிக்கும் போதும், மீண்டும் சீனா தான். 2 ஜி இண்டர்நெட்டுக்கு நாம் பயன்படுத்திய Dongle நினைவிருக்கிறதா? ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன், டொக்கோமோ இவர்கள் அனைவரும் கொடுத்த அந்த Dongle சீனத் தயாரிப்பு தான். மிக மிக தாமதமாக இந்தியாவில் இருந்து மொபைல் தயாரிப்புக்கு இறங்கினாலும் உதிரி பாகங்களை சீனாவில் இருந்து வாங்கி இங்கே assembling யூனிட் மட்டும் வைத்து தயாரித்து கொடுத்தார்கள். அதற்கு பிறகு 3ஜி, 4ஜி வரை எல்லாமே சீனா தான். அடுத்தாக 5ஜி க்கும் அவர்கள் தயாராக இருப்பார்கள். இருக்கிறார்கள். எதிர்கால தேவை கருதி மாணவ பருவத்தில் இந்தி கற்று கொடுத்த கதையெல்லாம்  படித்து பாருங்கள் அவர்களி திட்டமிடுதல் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கும். 

இன்னும் அனைத்து துறைகளையும் கணக்கெடுத்தால், கடந்த 20 வருடங்களில் நமது நாட்டின் உழைப்பில் பாதியை சீனாவுக்கு தாரை வார்த்திருப்போம். 15 வருடங்களுக்கு முன் செய்திருக்க வேண்டிய தடையை இப்போது தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது. கத்தியின்றி ரத்தமின்றி செய்திருக்க வேண்டியதை இப்போது பலத்த சேதாரத்துடன் செய்யப் போகிறோம். இப்போதாவது செய்கிறார்களே என்று சந்தோஷப்படவும் முடியாது. 

சீனாவை போலவே இந்தியாவில் ஒரு காலத்தில் டெல்லி மேக் என்று பொருட்கள் வரும். டூப்ளிகேட் ப்ராடக்ட், டூப்ளிகேட் டிசைன் என்று குறைகள் சொன்னாலும் அவற்றை முறைப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கவே இல்லை என்பதே உண்மை. எந்த ஒரு பொருளையும் கண்ணால் பார்த்தே அதை போலவே செய்து தரக்கூடிய திறமை படைத்தவர்கள். இங்கே தமிழகத்தில் கோவையில் அதே போன்ற திறமைசாலிகளை நானே பார்த்திருக்கிறேன். அவர்களில் பாதி பேரை மின்வெட்டில் இழந்தோம். டெல்லி போன்ற இடங்களில் இருந்தவர்களை சீனாவிடம் இழந்தோம்.  இந்தியா முழுவதும் இருக்கும் முறை சாரா சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசிடமிருந்து பெரும்பாலும் எந்த உதவியும் கிடைப்பதில்லை  என்பது தான் இங்கு கவலைக்குரிய விஷயம். ஒரு நடைமுறை உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் கோவையில் வெட் கிரைண்டர் தயாரிப்பவர்கள் மிக அதிகம். சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கில் இருக்கிறீர்கள். அவர்கள அனைவரும் இணைந்து ஒரு சங்கத்தை ஏற்படுத்தி அவர்களை தயாரிக்கும் வெட்கிரைண்டருக்கு "லஷ்மி" என்று ஒரு பொதுவான பிராண்டை உருவாக்கினார்கள். அதன்படி அந்த சங்கத்தில் இருப்பவர்கள் எங்கிருந்து கிரைண்டர் தயாரித்தாலும் "லஷ்மி" பிராண்டில் தான் விற்பனையாகும். இது ஒரு வெற்றிகரமான தொழில் மாடல். இதே போன்று டெல்லி உற்பத்தியாளர்களுக்கு நடந்திருந்தால், இன்று இந்தியாவின் தலையெழுத்தே வேறு.  உற்பத்தி தொழிலில் இருப்பவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு சலுகைகள் தரவும் அரசுகள் தயாராக இல்லை. அவர்களாக தட்டுதடுமாறி எழுந்து நிற்க வேண்டும். அப்படி எழுந்து நின்றவுடன் வரி கட்டுங்கள் என்று சொல்வதற்கு மட்டும் அரசு வரும். 

உலகமயமாக்கலுக்கு பிறகு கடந்த 20 வருடங்களில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளி இறைக்கப்பட்ட இலவசங்கள், வழங்கப்பட்ட சலுகைகளில் 10% இந்திய சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் கூட, இந்தியா இன்று எங்கோ இருந்திருக்கும். இப்போதும் ஒன்றும் தாம்தமில்லை. உலக அளவில் சீனாவின் மார்கெட்டை பிடிக்க இந்தியாவுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பை அரசும் இந்திய தொழில்துறையும் எப்படி பயன்படுத்தப் போகிறது என்பது தான் இப்போதைய கேள்வி.

Comments